துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அவரது தாத்தா முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் இருப்பதாகவும், அபார ஞாபக சக்தி கொண்டவர் என்றும் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். விழாவில் பேசிய உதயைந்தி "என்னுடைய அரசியல் வாழ்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே காட்பாடி தொகுதிதான். நமது பொதுச்செயலாளர் மண் இந்த காட்பாடி மண். அப்படிப்பட்ட பெருமைமிகு மண்ணில் இருப்பதை நான் பெருமையாகக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் துணை முதலமைச்சர் ஆனவுடன் என்னை முதலில் வாழ்த்தியவர் துரைமுருகன் தான், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். அதன் பின் துணை முதலமைச்சர் ஆனபோது, என் அருகில் வந்து அமர்ந்து கொள் என்று அவர்தான் வாழ்த்தினார்" என்று உதயநிதி பெருமிதத்துடன் கூறினார்.
அடுத்துப் பேச வந்த அமைச்சர் துரைமுருகன், "என் மகன் கதிர் ஆனந்த் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்காக முதலில் தேர்தல் பிரச்சாரம் செய்தவர் துணை முதல்வர் உதயநிதிதான்" என்று குறிப்பிட்டார். மேலும், "துணை முதல்வர் உதயநிதி அவரது தாத்தா கருணாநிதி போல் ஞாபக சக்தி அதிகம் கொண்டவர். அவரை போலவே கம்ப்யூட்டர் மைண்ட் உடையவர்" என்று புகழாரம் சூட்டினார்.