நடிகர் உதயநிதி திரையுலகில் ஓரளவு காலூன்றி வெற்றிகளை கொடுத்து வந்தாலும் அரசியலை பொருத்தவரை அவர் இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவருடைய அரசியல் டுவீட்டுக்கள் பல சமீபகாலத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது
இந்த நிலையில் நேற்று அவர் ஒரு டுவீட்டில் ரஜினி, மற்றும் கமல் ஆகிய இருவரும் ஜெயலலிதா சிறை சென்றபோது உண்ணாவிரதம் இருந்ததாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். ஆனால் அதன்பின் அந்த புகைப்படம் போட்டோஷாப்பில் உருவானது என்பதை அறிந்து பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, 'முதல்முறையாக சரிபார்க்காமல் ஒரு தவறான, போட்டோஷாப் செய்யப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்துவிட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். அந்த புகைப்படத்தையும் டெலிட் செய்துவிட்டேன். என்னுடைய தவறுதான். எனது அட்மின் தவறு என்று நான் சொல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்.
உதயநிதியின் இந்த டுவீட்டுக்கு பலர் வாழ்த்துக்களும், ஒருசிலர் இனியாவது இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.