Publish Date: Fri, 28 May 2021 (08:17 IST)
Updated Date: Fri, 28 May 2021 (08:18 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் ஆகி தற்போது அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
இந்த நிலையில் ராஜகோபாலன் உள்பட வேறு எந்த ஆசிரியராலும் பாதிக்கப்பட்டிருந்தால் மாணவிகள் தாராளமாக புகார் கொடுக்கலாம் என காவல்துறை அறிவித்தது. மேலும் புகார் கொடுக்கும் மாணவிளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர்களது பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த 2 புகார்கள் குறித்து ஆதாரங்களை திரட்டும் பணியில் அசோக் நகர் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தோண்ட தோண்ட புகார்கள் குவிந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.