கர்நாடகாவில் தெருவில் விற்கப்படும் ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே பெட்டஹள்ளி என்ற கிராமத்தில் பிரசன்னா என்பவரும், அவரது மனைவி பூஜாவும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திரிசூல், திரிஷா என ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன் தினம் அப்பகுதியில் தெருவில் ஐஸ்க்ரீம் விற்று வந்தவரிடம் குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்துள்ளனர். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு சில மணி நேரங்களில் குழந்தைகளின் உடல்நிலை மோசமாக தொடங்கியுள்ளது, உடனடியாக குழந்தைகளை ஸ்ரீரங்கபட்டணா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்று இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதற்கு ஐஸ்க்ரீமே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் குழந்தைகள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்க்ரீமையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் ஐஸ்க்ரீம் வியாபாரியையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஐஸ்க்ரீமால் குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.