தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபான பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது, த.வெ.க. தொண்டர்கள் பாருக்குள் நுழைய முயன்றதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு அருள் என்பவரின் கையை ஒரு தொண்டர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக ஏட்டு அருளுக்குக் காயம் ஏற்படவில்லை.
தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 105 த.வெ.க.வினர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, காவலரின் கையை கடித்த தொண்டரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
விசாரணையில் அவர் ஜெமினி என அடையாளம் காணப்பட்டார். அவரை தேடி பிடித்த போலீசார் கைது செய்தனர். மேலும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட 5 த.வெ.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.