கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு குழுவை அமைத்துள்ள நிலையில், அந்த குழுவின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்திய போது, இடிபாடுகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்தது.
இந்த நிலையில், கரூர் துயர சம்பவத்தை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.