கட்சியை பதிவு செய்த பிறகு தான் தேர்தலில் போட்டியிடப்போவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில், பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கிய நிலையில் போட்டியிட்ட அமமுக கட்சி, பெரும் தோல்வியை அடைந்தது. அதன் பின்பு கட்சியிலிருந்து நிர்வாகிகள் பலர் வெளியேறி வேறு கட்சிகளில் இணைந்து வந்தனர்.
இது போன்ற சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வேலூரில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இது குறித்து விருத்தாச்சலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், அமமுகவில் இருந்து சில நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்குச் சென்றதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கட்சி நிர்வாகிகளின் பழைய வழக்குகளை காட்டி மிரட்டி, வற்புறுத்தி வேறு கட்சிகளில் இழுத்துச் செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வோரு சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என்றும், கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெறுவதால், பதிவு செய்த பின்னர், நிலையான சின்னத்தைப் பெற்றே தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.