ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஆவின் நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களான நெய் லிட்டருக்கு 70 ரூபாயும், வெண்ணெய் கிலோவுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாகும்.
எனவே, உயர்த்தப்பட்டுள்ள நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்