அதிமுகவில் பெருமான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் அவர்கள் பணத்திற்கு விலை போனதாக டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.
இதனால் டெல்லி புறப்பட்டு சென்ற ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ஓபிஎஸ்-ஐ கட்சி பொருளாளர் பதவியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த களேபரங்கள் குறித்து பேசியுள்ள அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் “அதிமுக அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை வாங்குவது போல, 25 லட்ச ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கொடுத்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை வாங்கியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.