தமிழகத்தில் கொங்கு நாடு தனியாக உருவாக்குவதான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டிடிவி தினகரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக நேற்றைய தினசரியில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலான நிலையில், தமிழகத்தை பிரிக்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.
மேலும் “ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.