திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைவுக்குப்பின் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், கஜா புயலை கார்ணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமமுக தலைவர் தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அதில், தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்.
இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய திமுகவும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.
திருவாரூரில் அமமுக வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.