Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

Advertiesment
MK Stalin

Mahendran

, புதன், 30 ஏப்ரல் 2025 (14:03 IST)
தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர்  ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
 
‘தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு’ என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலிமை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசியல் சட்ட மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன். கூட்டத் தொடர் நிறைவடைந்த நாளில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வராதததால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் கை குலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.
 
சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவு பெற்ற நாளில், 7வது முறையாகத் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றும், திராவிட மாடல் அரசின் வெர்ஷன் 2.ஓ. லோடிங் ( version 2.0 loading) என்றும் உறுதியாகத் தெரிவித்தேன். ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். “மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து  வருகிறோம்” என்று. திமுக எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை.
 
சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க என்பது தமிழ்நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். மக்களின் பேராதரவுடன் தி.மு.கவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்” எனத் தெரிவித்துள்ள்ளார். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த போப் ஆகிறாரா ஆப்பிரிக்க கருப்பின கார்டினல்? - அடுத்த போப் ஆண்டவருக்கான பரபரப்பான போட்டி!