ரயில்வே துறையில் ஏராளமான வடமாநிலத்தவர் பணிபுரியும் நிலையில் பயணிகள் சேவையை மொழிப்பிரச்சினை இல்லாமல் மேற்கொள்ள அவர்களுக்கு பிராந்திய மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையில் பல மாநிலத்தவரும் பல்வேறு ரயில்வே கோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் டிக்கெட் கொடுக்கும் பணி, லோகோ பைலட் என பல பணிகளில் வடமாநிலத்தவர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பிராந்திய மொழிகள் புரியாததால் அவர்களுக்கும், பயணிகளுக்குமிடையேயான தகவல் தொடர்பில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் வடமாநில பணியாளர்களுக்கு அவரவர் பணிபுரியும் பிராந்தியங்களில் மொழியை பேச கற்றுத்தரும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் வடமாநில தொழிலாளர்களுக்கு பிராந்திய மொழி கற்றுத்தருவதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த பயிற்சி தொகுதியை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.