திருவண்ணாமலை அருகே ரயில் வரும்போதும், கேட் கீப்பர் கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த நிலையில், அதை கவனித்த ரயில் ஓட்டுநரே ரயிலை நிறுத்தி, ரயிலில் இருந்து கீழே இறங்கி வந்து கேட்டை மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் கடலூர் அருகே ரயில்வே கேட் மூடப்படாததால், பள்ளி வேன் ஒன்று ரயிலால் மோதப்பட்டு இரண்டு மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருவண்ணாமலை அருகே தண்டரை என்ற பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், கேட் கீப்பர் அலட்சியமாக கேட்டை மூடாமல் இருந்துள்ளார். கேட் மூடாமல் இருப்பதைப் பார்த்த ரயில்வே ஓட்டுநர் ரயிலை நிறுத்தி, ரயிலில் இருந்து இறங்கி வந்து கேட்டை மூடினார்.
அதன் பிறகு அவர் ரயில்வே துறைக்கு புகார் அளித்த நிலையில், அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே ஒரு கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இரண்டு உயிர்கள் போன நிலையில், மீண்டும் மீண்டும் கேட் கீப்பர்கள் அலட்சியமாக இருப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.