உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலையில், மலையையே சிவபெருமானின் அம்சமாக போற்றும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இதனால், அண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த மலை, பக்தர்கள் மத்தியில் பெரும் புனிதமாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும், சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில், லட்சக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றி வலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.
குறிப்பாக, கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து ஆன்மிகப் பரவசத்தில் திளைப்பார்கள்.
இந்த நிலையில், ஆனி மாத பௌர்ணமிக்கான கிரிவலம் வரும் ஜூலை 10 ஆம் தேதி அதிகாலை 2:33 மணிக்குத் தொடங்கி, ஜூலை 11 ஆம் தேதி அதிகாலை 3:08 மணிக்கு நிறைவடையும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடலாம்.
தற்போதைய வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பகல் நேரத்தில் கிரிவலம் செல்வதை தவிர்த்து, அதிகாலை, மாலை அல்லது இரவு நேரங்களில் கிரிவலம் வருவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.