எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகவும், மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 25ஆம் தேதி அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 14 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் பச்சமுத்துவை காவல் துறையினர் கைது செய்தனர்.
மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில், காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும், பச்சமுத்துவுக்கு செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டு, புழல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் இன்று பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றமத்தில் நடைபெற்றது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
பச்சமுத்துவுக்கு ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்ட மாணவர்களும், மதனின் தாயாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.