விழுப்புரத்தில் அரசு பேருந்தில் பயணித்த மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரத்தில் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரத்தில் ஆள் இல்லா அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை தந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுனர் அன்புசெல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைதும் செய்யப்பட்டுள்ளனர்
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் சிலம்பரசன், உடந்தையாக இருந்ததாக ஓட்டுனர் அன்புச்செல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு தலைகுனிவையும், களங்கத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு ஆகும்.
இதுபோன்ற நிகழ்வுகளை வரும் காலங்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் அனுமதிக்கக்கூடாது, மீறி ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என எச்சரித்துள்ளது.