நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளியான பிரபல தமிழ் சினிமா ஃபைனான்சிர் அன்பு செழியனை கைது செய்யும் முயற்சியில் தமிழக போலீசார் மெத்தனம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தாரை தப்பட்டை படத்தை தயாரித்த போது சசிகுமார் தரப்பு அன்பு செழியனிடம் ரூ.18 கோடி வாங்கியுள்ளது. அதற்காக இதுவரை வட்டியும் கட்டி வந்துள்ளனர். ஆனால், அசலை திருப்பித்தரக்கூறி அன்பு தரப்பு நெருக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, சசிகுமார் நடித்த கொடிவீரன் படமும் வெளிவருவதில் அன்பு சிக்கலை ஏற்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக எழுந்த மன உளைச்சலில் சசிகுமாரின் உறவினரான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டு மரணடைந்தார். மேலும், தன்னுடைய மரணத்திற்கு அன்பு செழியனே காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
எனவே, சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அன்பு செழியனை தேடி வருவதாக கூறப்பட்டது. ஆனால், பல நாட்கள் ஆகியும் அவர் இன்னும் பிடிபடவில்லை.
ஆளும் கட்சியினரின் ஆதரவோடு அவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், அவர் விஷயத்தில் கெடுபிடி காட்ட வேண்டாம் என மேலிடம் கூறியிருப்பதாலேயே தமிழக போலீசார் அவரை இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இல்லையெனில், இந்நேரம் அன்பு செழியனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நிச்சயம் ஆஜர்படுத்தியிருப்பார்கள் என சினிமா துறையினர் கூறி வருகின்றனர்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு மத்தியில் அன்பு செழியனை மக்களே மறந்துவிட்டனர். ஒருபக்கம் அவரை தேடும் பணியை தனிப்படை போலீசார் நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்தை மும்பையிலும், கொளத்தூரில் நகைக்கடையை கொள்ளையடித்தவர்கள் ராஜஸ்தானில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கியுள்ளனர் எனவும் மோப்பம் பிடிக்கத் தெரிந்த தமிழக போலீசார் அன்பு செழியனை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறுவது நம்பும் படியாக இல்லை என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.