நடந்து வந்தாலும் அனுமதி இல்லை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டது என்பது தெரிந்ததே. குறிப்பாக கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள எல்லைகள் அதிரடியாக மூடப்பட்டன. அங்கு செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் காவலர்கள் உள்ளனர்
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து வரும் பேருந்துகள் கேரள எல்லைகளில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து ஒரு சிலர் கேரளா எல்லையில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து தமிழக எல்லையை கடக்க முயன்றனர். அவ்வாறு வருபவர்களுக்கும் தமிழக எல்லையில் அனுமதி இல்லை என்று மறுக்கப்படுவதால் காவலர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகின்றன
கொரோனா சோதனையை தங்களுக்கு நடத்திவிட்டு தமிழகத்துக்குள் அனுமதிக்குமாறும், தாங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று கூறியும் காவலர்கள் எல்லையில் யாரையும் அனுமதிக்காமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக எல்லைகள் மூடப்படும் என்று அறிவித்து இருந்தும் அப்போதே தமிழகத்திற்குள் வராமல் இருப்பது அவர்களுடைய குற்றம்தான் என்று காவலர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்களே தமிழகத்திற்குள் வர முடியாமல் இருக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.