அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
பிப்ரவரி 15ம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிப்ரவரி 15ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும், அதன்பின்னரும் அரசு செவிசாய்க்காவிட்டால் பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும், எனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.