மின்வாரிய சேவைகள், புகார்களை பெறவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய செயலியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகள், நிறுவனங்கள் பலவற்றிற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, கடை, வணிக வளாகம், கட்டுமான பகுதி என இடத்திற்கு ஏற்றவாறு மின்க்கட்டணம் மற்றும் கணக்கீட்டில் மாற்றங்கள் உள்ளன. இந்நிலையில் பல்வேறு மின்வாரிய சேவைகள் மற்றும் புகார்களுக்கும் மக்கள் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகங்களை நாட வேண்டிய தேவை உள்ளது. விண்ணப்பித்த சேவைகளில் நிலைகளை அறியவும் அடிக்கடி அலுவலகத்திற்கு சென்று வர வேண்டியுள்ளது.
அதை சரிசெய்யும் விதமாக மக்கள் வீட்டிலிருந்தே மின்சார இணைப்பு தொடர்பான சேவைகளை பெற புதிய செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்குகிறது. இந்த செயலி மூலம் மின் இணைப்பை துண்டித்தல், புதிய இணைப்பு வழங்குதல் ஆகியவற்றை குறித்த விண்ணப்பம் மற்றும் அதன் தற்போதைய நிலை ஆகியவற்றை ட்ராக் செய்து அறியலாம். பழுதான மீட்டர்களை சரி செய்வது, புகார்கள் அளிப்பது உள்ளிட்ட 7 வகையான மின்வாரிய சேவைகளை இந்த செயலி மூலமாகவே எளிதில் பெற முடியும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.