குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான கலப்பட இருமல் மருந்து விவகாரத்தையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பலியான சம்பவத்தை அடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மசியூட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்துக்குரிய 'கோல்ட்ரிஃப் சிரப்' விற்பனை மாநிலம் முழுவதும் உடனடியாக தடை செய்யப்பட்டது.
மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில், அதில் 48.6% டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol - DEG) என்ற உயிர்க்கொல்லி நச்சுப்பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, நிரந்தரமாக மூடப்பட்டது.
நிறுவன உரிமையாளர் ரங்கநாதன், தமிழக காவல்துறையின் உதவியுடன் மத்தியப் பிரதேச சிறப்பு புலனாய்வுக் குழுவால் சென்னையில் கைது செய்யப்பட்டார். மேலும், நிறுவனத்தை முறையாக ஆய்வு செய்ய தவறியதற்காக இரண்டு மருந்துகள் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பின் தரத்தை உறுதி செய்ய, தமிழகத்தில் உள்ள பிற மருந்து நிறுவனங்கள் அனைத்திலும் விரிவான ஆய்வுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.