தமிழகத்தில் இருளர் பழங்குடி மக்கள் பாம்புகள் பிடிக்க அனுமதி அளித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் முக்கியமான தொழிலாக பாம்பு பிடிக்கும் தொழில் உள்ளது. பாம்புகளை பிடித்து அவற்றிடமிருந்து விஷத்தை எடுத்து மருந்து நிறுவனங்களுக்கு விற்க ஆண்டுதோறும் அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான லைசென்ஸை வனத்துறை அவர்களுக்கு வழங்காத நிலையில் அவர்களது வாழ்வாதாரம் முடங்கியிருந்தது. இந்நிலையில் இருளர் பழங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிக்கவும், அவற்றின் விஷத்தை விற்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
விஷ முறிவு மருந்து தயாரிக்க நல்ல பாம்பு, கண்ணாடி வீரியன், கட்டு வீரியன், சுருட்டை உள்ளிட்ட பாம்புகளிடமிருந்து விஷம் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில், இந்த பாம்புகளை பிடித்து விஷம் எடுப்பது இருளர்களின் முக்கிய தொழிலாக உள்ளது.