ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் தமிழக முதல்வராக இருப்பவர் சென்னை கோட்டையில் கொடியேற்று வைத்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். இவர் இன்று இரண்டாவது முறையாக சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போதும் தேசிய கொடியை ஏற்றினார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் இரண்டாவது முறையாக தேசிய கொடியை கோட்டையில் ஏற்றும் பெருமையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருந்ததாவது: விடுதலைப் போராட்ட தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அவர்களின் பிறந்த நாளன்று தமிழக அரசின் சார்பில் விழா கொண்டாடப்படும் என்றும், இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும் அனைவரும், சாதி, மத, பேதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்