மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளிவந்தது. இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் 48%க்கும் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட் 9% அதிகமாகும்,. புதிய பாடத்திட்டத்தில் இருந்து பல கேள்விகள் நீட் தேர்வில் வந்திருந்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எளிமையாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ரிதுஸ்ரீ என்பவர் நீட் தேர்வு எழுதிய நிலையில் அவர் எதிர்பார்த்ததை விட குறைந்த மார்க் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனவிரக்தியில் இருந்த ரிதுஸ்ரீ, தனது வீட்டில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக மாணவி ரிதுஸ்ரீ, திருப்பூரில் உள்ள ஜெய்வாபாயா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். +2 தேர்வில் இவர் 600க்கு 490 மார்க் எடுத்திருந்தார். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ரிதுஸ்ரீ அழுது கொண்டே இருந்ததாகவும், பெற்றோர்கள் அவரை சமாதானம் செய்த நிலையில் அவர் சமாதானம் ஆகாமல் மன வெறுப்பில் இருந்ததாகவும் அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே போய்விட்டதாக எண்ணுவதை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும் மருத்துவத்தையும் தாண்டி அதைவிட சிறப்பாக பல கோர்ஸ்கள் தற்போது இருப்பதால் மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.