திருப்பூர் மாவட்டத்தில் மாணவன் ஒருவரை இரு மாணவிகள் காதலித்த விவகாரத்தில் கும்பலாக சேர்ந்து குடுமிப்பிடி சண்டை போட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக பள்ளி மாணவிகள் பலர் கும்பல் சேர்த்துக் கொண்டு திரிவதும், அடிதடி மோதல் செயல்களில் ஈடுபட்டு வருவதும் பல பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மதுரையில் பேருந்து நிலையம் ஒன்றில் மாணவிகள் கும்பலாக சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோன்ற சம்பவம் ஒன்று திருப்பூரில் தற்போது நடந்துள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள புது ராமகிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் மாணவி ஒருவர் மாணவன் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த மாணவனுக்கு வேறு ஒரு மாணவி அடிக்கடி போன் செய்வதும், சாட்டிங் செய்வதுமாக இருந்துள்ளார்.
இதுதொடர்பாக இரு மாணவிகளிடையேயும் மாணவருக்காக மோதல் தொடர்ந்து வந்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என பவானிநகர் காட்டுப்பகுதிக்கு இரு மாணவிகளும் தங்களுக்கு ஆதரவான தோழிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்படாத நிலையில் மோதல் எழுந்துள்ளது. இதில் அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் ஸ்கேல், லஞ்ச் பாக்ஸ் போன்ற பொருட்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
மாணவிகள் கும்பலாக சண்டை போடுவதை கண்டு அப்பகுதி மக்கள் அவர்களை தடுத்து சமாதானம் செய்து பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர், அதன்பேரில் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.