உடல் நலக்குறைவு காரணமாக திருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிவிட்டு வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு திருமுருகன் காந்தி பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் பேசியதாக அவர் மீது உபா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சமீபத்தில் சென்னை எழும்பூர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி மீது பதியப்பட்ட உபா பிரிவு வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்திக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் உணவுக் குழாயில் பிரச்சனை இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி சிகிச்சைக்காக திருமுருகன் காந்தி இன்று அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.