இந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்போது அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதலாக கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயில் சுட்டெரிந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக கோடை மழை காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மே மாதம் என்றாலே கொளுத்தும் கோடை என்ற நிலையில் எப்போது மே மாதம் முடியும் என காத்திருந்த மக்களுக்கு மழை ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட 3 நாட்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியிலிரிந்து மாலத்தீவு, இலங்கை பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்றால் நல்ல மழை பொழிய உள்ளது. வரும் வாரங்களில் கேரளா, ஆந்திரா பகுதிகளிலும் மழை பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.