உடுமலைப்பேடையில் சங்கர் என்ற வாலிபர் ஆணவ கொலை செய்யபட்ட வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் இன்று மரணமடைந்தார்.
இந்த வழக்கு மட்டுமில்லாமல், முக்கியத்துவம் வாந்த பல வழக்குகள் நீதிபதி அலமேலு நடராஜன் அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார். திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக நேற்று அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.
கோவையில் பிறந்த அலமேலு நடராஜன், திருச்சி சட்டக்கல்லூரியில் படித்தார். அதன் பின் 1991ம் ஆண்டு காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்தார். பின், மாவட்ட நீதிபதியாக கோவையிலும், வேலூரிலும் பணியாற்றினார். அதன் பின் 2015ம் ஆண்டு திருப்பூர் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக அவர் பணிபுரிந்தார்.
வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்குவதில் பெயர் பெற்ற இவர், உடுமலை சங்கர் கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுகளில் 2 முறை விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.