சனாதன கருத்தியலை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.. கமல்ஹாசன் சந்திப்புக்கு பின் திருமாவளவன்..!

Siva
வெள்ளி, 18 ஜூலை 2025 (12:02 IST)
சாதியை காக்கும் சனாதன கருத்தியலே பகை என்றும் அதை அழித்து ஒழிப்பதே அறம் சார்ந்த அரசியல் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ஒருமணிநேரம். கரைந்ததே தெரியவில்லை. கட்சி அரசியல் கலப்பில்லாத கருத்துப்பொழிவு. ஒரு சொல்லும் வீண் இல்லை. சாதியே எதிரி. சாதியைக் காக்கும் சனாதனக் கருத்தியலே பகை. அதனை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.
 
தேர்தல் களத்தில் வெல்வது வெற்றியுமல்ல ; தோற்பது தோல்வியுமல்ல! திராவிடம் தென்னாட்டுக்கு மட்டுமோ; ஓரிரு கட்சிகளுக்கு மட்டுமோ உரியதல்ல; அது தேசம் தழுவியது. அயோத்திதாசப் பண்டிதர் முன்மொழிந்தது. நாளும் பொழுதும் இடையறாது நாட்டை உலுக்கும் மூன்று பரிசுத்த ஆவிகள். அவை, உடுக்கை அடித்து எவராலும் குடுவைக்குள் அடைக்கமுடியாத அறிவுப்பிசாசுகள்.
 
காந்தி, அம்பேத்கர், நேரு ஆகிய அம்மூவரும் தான் பழமைவாதம் தகர்க்கும் கருத்தியல் பேரிடிகள். புதுமை இந்தியாவைப் படைக்கும் ஞானச்சிற்பிகள். அவர்களைச் சிதைக்க முனைவது சிறுபிள்ளை விளையாட்டு! இன்று அரசமைப்புச் சட்டம்தான் நாம் ஏந்த வேண்டிய ஓராயுதம்; பேராயுதம்! இப்படி நீண்டது...அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் கருத்தாடல். தெளிந்த பார்வை! தேர்ந்த இலக்கு! சிலிர்ப்பைத் தந்தது! சிலாகிக்க வைத்தது!
 
ஆடைகொண்டு போர்த்த வேண்டாம்; உடலைக் கொண்டு போர்த்துங்கள்"என்று சொல்லிக்கொண்டே என்னை ஆரத்தழுவி அணைத்துக்கொண்ட அவரின் பெருமூச்சில் அன்பின் கதகதப்பை உணர முடிந்தது. உள்ளம் முழுதாய் உறைந்து நின்றது. இடைவெளி இல்லாது இறுக அணைப்பதில் தானே சகோதரத்துவம் துளிர்விடும்! சகோதரத்துவம் போற்றும் சகலகலாவல்லவன் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்."
 
இவ்வாறு திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments