தூய்மை பணியாளர்கள் விவகாரத்தை வைத்து சிலர் அரசியல் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த பிரச்னைக்கு நீதி கிடைப்பதைப்பற்றி கவலைப்படாமல், தி.மு.க. கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த பிரச்னை குறித்துப் பேசிய அவர், பெரும்பாலான தூய்மை பணியாளர்களின் பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் தான் தனியார்மயமாக்கப்பட்டன என்று கூறினார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை அ.தி.மு.க. ஆட்சியில் தனியாருக்கு கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய திருமாவளவன், அதற்கு அ.தி.மு.க. என்ன பதில் சொல்லப் போகிறது என்று வினவினார். இருப்பினும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களையும் தனியார்மயத்தில் இருந்து விடுவித்து, அவர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.