எப்ப கேட்டாலும், எந்த நேரத்தில் கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல் சிதறுகிறது என்றும் அதே நிலை தமிழகத்திலும் வரும் என்றும் தெரிவித்தார்.
திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் இடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக தெரிவித்த ஜெயக்குமார், விரைவில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் சிதறும் என்றும் கூறினார். வரும் தேர்தலில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்து காட்டுவோம் என்று அவர் தெரிவித்தார்.
பாஜக என்று பெட்டியை கழற்றி விட்டோம் என்றும் இனி அந்த பெட்டியை இணைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த பத்து ஆண்டுகளில் மாநில நலன்களை பாஜக புறக்கணித்ததை சுட்டிக்காட்டுவோம் என்றும் கூறினார்.
அண்ணாமலை போல் அண்ணா அண்ணா என போலி கும்பிடு போடும் நபர்கள் நாங்கள் இல்லை என்றும் நடக்காத விஷயத்தை அண்ணாமலை கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.