தாம்பரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரத்திற்கு வரும் பேருந்துகளை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து முனையம் தற்போது வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் ஏராளமான மக்கள் தினம்தோறும் வெளியூர் செல்ல கிளாம்பாக்கத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக இருந்த தாம்பரம், ஜிஎஸ்டி சாலை மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து செல்லும் உள்ளூர் பேருந்துகள் அனைத்தும் தாம்பரத்தை கடந்து செல்வதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இனி செங்கல்பட்டு, திண்டிவனம் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு பேருந்து மாற வேண்டியதிருக்கும் என்பது சிரமத்தை கொடுக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த புதிய நடைமுறை மார்ச் 4 முதல் அமலுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K