Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகாரப்பூர்வமற்றவர்கள் டிவி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது: தவெக அறிவிப்பு

Advertiesment
vijay-bussy anand

Siva

, ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:29 IST)
அதிகாரப்பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம்  என தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாலர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.
 
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. 
 
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
 
எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! - சிம்போனி நிகழ்ச்சிக்கு வாழ்த்து!