சென்னை மாநகராட்சி தூய்மை பணிகள் தனியாருக்கு மாற்றப்படுவதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தனியாருக்கு மாற்றப்படுவதால் தூய்மை பணியாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கும் என பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, இதுநாள் வரை சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தற்போது தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனவே இந்த புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப்பாதுகாப்பும் பல சலுகைகளும் இந்தப் பணியாளர்களுக்கு கிடைத்திட வழி ஏற்பட்டுள்ளது. இப்பணியாளர்களுக்கு
1. வருங்கால வைப்பு நிதி (PF).
2. ஊழியம் மற்றும் மருத்துவக்காப்பீடு (ESI),
3. போனஸ்,
4. பண்டிகை கால சிறப்பு உதவிகள்,
5.திருமண உதவித்தொகை மற்றும் கல்வி/ உயர்கல்வி உதவித்தொகை,
6. இன்சூரன்ஸ் திட்டத்தில் விபத்து மரணம்/ இயற்கை மரணம் உள்ளிட்டவற்றிற்கு நிவாரண இழப்பிடுநிதியும் வழங்கப்படுகின்றன.
7.ஆண்டுதோரும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன.
தொழிளாலர் நல நிதி
1. திருமண உதவித் தொகை - ரூ. 20,000/- வரை
2.கல்வி உதவித் தொகை - ரூ. 12,000/- வரை
3. மரண நிகழ்வுக்கான நிதி உதவி
4. புத்தகத்திற்கான நிதி உதவி
5. கணினி பயிற்சி நிதி உதவி
விடுப்பு மற்றும் விடுமுறை நாட்கள் பலன்கள்
1. தற்செயல் விடுப்பு - 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு)
2. ஈட்டிய விடுப்பு - 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு)
3. தேசிய விடுமுறை நாட்கள் (இரட்டிப்பு சம்பளம் பெரும் வசதியும் உண்டு) பணியாளர்கள்
இந்த நாட்களில் பணி செய்யாவிட்டாலும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் பெறும் வசதி உண்டு.
மேலும் இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், காலணிகள், மழைக்கால உடைமற்றும் சுகாதார பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதனுடன் தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும்.
மேற்கூறிய பணி மற்றும் ஊதிய விவரங்கள் குறித்து விரிவாக தற்காலிக பணியாளர்களின் பிரிவினர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுவின் மூலமாக பணிகளை செய்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தனியார் நிறுவனம் பணியில் சேர்ப்பதையும் அவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு மற்றும் பணப் பலன்கள் வழங்குவதையும் பெருநகர சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும், உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
Edit by Prasanth.K