திருவண்ணாமலை மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி இருந்து வரும் நிலையில் அதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார்.
ஆண்டுதோறும் வரும் திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலையில் உள்ள மகாதீப மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை நடைபெற உள்ள நிலையில் சில தினங்கள் முன்னதாக பெய்த கனமழையால் மகாதீப மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் காரணமாக வழக்கமாக பக்தர்கள் மலையேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாதீப மலையில் இந்த ஆண்டு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுமா என்ற கேள்விகள் இருந்து வந்தாலும் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை விழா பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து பேசியுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “ஃபெஞ்சல் புயல் பாதிப்பிற்கு பிறகு திருவண்ணாமலை கிரிவலம் மலைப்பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர்கள் உட்பட 8 பேர் கொண்ட குழுவினர் மலை மீது ஏறி ஆய்வு செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீபத் திருவிழா நடைபெறும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மனித சக்திகளை பயன்படுத்தி தீப மலையில் தீபம் ஏற்றப்படும். கொப்பரை மற்றும் நெய் எடுத்து செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படும்” என உறுதி அளித்துள்ளார்.
Edit by Prasanth.K