Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

Mufasa The Lion King

Prasanth Karthick

, சனி, 21 டிசம்பர் 2024 (13:14 IST)

வால்ட் டிஸ்னி படங்கள் என்றாலே குழந்தைகளை நம்பி அழைத்துச் செல்லலாம் என்பதை தாண்டி இந்த படங்களை காண பெரியவர்களுமே ஆர்வம் காட்டுவது உலக அளவில் அதிகரித்துள்ளது. சமீபமாக டிஸ்னி தனது க்ளாசிக் கார்ட்டூன் படங்களான ஜங்கிள் புக், த லயன் கிங் போன்றவற்றை லைவ் ஆக்‌ஷன் படமாக வெளியிட்டு வசூல் சாதனை படைத்து வருகிறது.

 

 

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள படம்தான் ‘முஃபாசா: தி லயன் கிங்’. தி லயன் கிங் படத்தில் வரும் சிம்பா சிங்கத்தின் அப்பாவான முஃபாசா சிங்கம் எப்படி அந்த காட்டுக்கு அரசன் ஆனது என்ற கதைதான் இந்த முஃபாசா. 

 

கதையின் தொடக்கத்தில் சிம்பா தனது மனைவி சிங்கத்தை அழைத்துக் கொண்டு பிரசவத்திற்காக காட்டுக்குள் சென்றுவிடுகிறது. சிம்பாவின் முதல் குழந்தையான கியாரா தனியாக இருக்க அவனுக்கு துணையாக டிமோனும், பும்பாவும் இருக்கிறார்கள். அப்போது இடி இடிப்பதால் பயப்படும் கியாராவுக்கு, ரஃபிக்கி கதை சொல்லத் தொடங்குகிறது. இப்படியா முஃபாசாவின் கதை தொடங்குகிறது.

 

வறட்சி காரணமாக குடும்பத்தோடு இடம்பெயரும் சிறுவன் முஃபாசா, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குடும்பத்தை தொலைக்கிறது. முஃபாசாவை கண்டெடுக்கும் டாக்கா அவனை தன் நண்பனாக்கி கொள்கிறான். இருவரும் சேர்ந்தே வளர்ந்து வரும் நிலையில் கிரோஸ் என்ற வெள்ளை சிங்கமும் அதன் கூட்டாளிகளும் ஒவ்வொரு காடாக சென்று அங்குள்ள சிங்க அரசர்களை கொன்று வருகின்றன.

 

இதனால் தான் வளர்ந்து வந்த இடத்திலிருந்து டாக்காவும், முஃபாசாவும் தப்பி ஓடுகிறார்கள். போகும் வழியில் அவர்களுக்கு சராபி என்ற பெண் சிங்கம், ரஃபிக்கி என்ற தீர்க்கதரிசனம் பெற்ற குரங்கு ஆகியவை பழக்கமாகின்றன. எல்லாரும் சேர்ந்து மிலேலே என்ற கனவு தேசத்தை நோக்கி பயணமாகின்றனர். பின்னால் கிரோஸ் மற்றும் வெள்ளை சிங்கள் அவர்களை துரத்தி வருகின்றன. 

 

கிரோஸை முஃபாசா வென்றதா? மிலேலே கனவு தேசத்தை அடைந்தார்களா? முஃபாசா எப்படி அரசன் ஆனது என்பது அதிரடி ஆக்‌ஷனுடன் நல்ல கருத்துகளையும் சொல்லும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

 

படத்தின் லைவ் ஆக்‌ஷன் தொழில்நுட்பமும், 3டியும் உண்மையான காட்டிற்குள் சென்று சிங்கங்களை நேரில் சந்திக்கும் உணர்வை தருகின்றன. படத்தின் நடுநடுவே வரும் பாடல்களும், அவை தமிழாக்கப்பட்ட விதமும் சற்று அயற்சி அளித்தாலும், அர்ஜுன் தாஸ், நாசர், சிங்கம் புலி, ரோபோ சங்கர் என சினி பிரபலங்கள் கொடுத்த டப்பிங் கதாப்பாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தி போகின்றன. படத்தின் பிரம்மாண்டம் 3டி தொழில்நுட்பத்தில் கண்களில் நிற்கும் விதமாக சிறப்பாக அமைந்துள்ளது. 

 

இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையை குடும்பமாக சென்று படம் பார்த்து களிக்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைந்துள்ளது முஃபாசா தி லயன் கிங்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேதனையும் பெருமையும்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முதல்வர் ஸ்டாலின்..!