Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈஷாவில் திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் கடைப்பிடிக்கப்படுகிறது! - தருமபுரம் குருமகாசந்நிதானம் பாராட்டு!

Advertiesment
Isha Yoga Tharumapuram adheenam

Prasanth Karthick

, புதன், 11 டிசம்பர் 2024 (18:14 IST)

ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த தவத்திரு தருமபுரம் ஆதீனம் அவர்கள், ‘யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ என்று துவங்கும் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது என பாராட்டினார். . 

 

 

தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்றும் இன்றும் வருகை தந்தார். தியானலிங்கம் முன்பாக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வலர்களும் ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அப்போது, ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்களின் தேவாரப் பாடல்களை அவர் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

 

பின்னர் அவர் தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்றார். முன்னதாக, சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். மேலும், ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையும் அவர் பார்வையிட்டார்.

 

ஈஷாவிற்கு முதல்முறையாக வருகை தந்த ஆதீனம் அவர்கள் அவருடைய அனுபவத்தை பகிரும் போது, “ஈஷா யோக மையத்தில் நடக்கும் பல விஷயங்களை 2 நாட்களாக நேரில் கண்டோம்.

 

“யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே’ என்று திருமூலர் கூறிய 4 நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

திருமூலர், தாயுமானவர், பதஞ்சலி முனிவர் வரிசையில் நம்முடைய தருமை ஆதீனமும் யோக கலையை பயிற்றுவிக்கும் சேவையை செய்து வருகிறது. இக்கலையானது நம் சைவ சித்தாந்த மரபில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என 4 நிலைகளாக சொல்லப்படுகிறது. அத்தகைய மிகவும் அற்புதமான யோக கலையை சத்குரு அவர்கள் உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருவது பாராட்டுக்குரியது.

 

அதேபோல், நம்முடைய மரபில் சிவபெருமானும் மரமும் ஒன்று. சிவ பெருமான் விஷத்தை தான் சாப்பிட்டுவிட்டு, அன்பர்களுக்கும் தேவர்களுக்கும் அமிர்தத்தை வழங்கினார். அதேபோல் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கார்பன் டை ஆக்ஸைடை உண்டுவிட்டு, மற்ற உயிர்களுக்கு உயிர் வாழ ஆக்சிஜைனை வழங்குகின்றன.

அந்த வகையில், மரங்கள் வளர்க்கும் சேவையை சத்குருவும் ஈஷா யோக மையமும் மிகச்சிறப்பாக செய்து வருகின்றனர். நம்முடைய தருமை ஆதீனத்தின் மணிவிழாவை முன்னிட்டு ஈஷா யோக மையம், தருமை ஆதீனம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து 60,000 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

 

இதுதவிர, நூற்றுக்கணக்கான நாட்டு பசுக்களை பராமரிக்கும் மிகப்பெரிய தொண்டையும் ஈஷா செய்து வருவதை நேரில் பார்த்து மகிழ்ந்தோம். ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளும் திருமுறைகளையும், தேவாரப் பாடல்களையும் மிக அழகாக பண்ணோடு பாடியது ஆச்சரியமாக இருந்தது. அகத்திய முனிவர் தோற்றுவித்த அருகி வரும் களரி என்னும் பாரம்பரிய தற்காப்பு கலையையும் இம்மாணவர்கள் சிறப்பாக கற்று தேர்ந்து வருகிறார்கள். களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் முனிவர்களால் அருளப்பட்டவை. அதற்கான முழுமையான பயிற்சிக் களத்தையும் ஈஷா வழங்குகிறது. கராத்தே போன்ற சில நவீன முறைகளை நோக்கியே அனைவரும் செல்லும்போது நம் பாரம்பரியமான தற்காப்பு கலைகளை ஈஷா பேணி வருகிறது.

 

திருவெண்காட்டில் உள்ள சூர்ய குண்டத்திலும், சோம குண்டத்திலும் கண்ணகி நீராடி விட்டு வழிபாடு நடத்தியதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஈஷாவிலும் சூர்ய குண்டம், சந்திர குண்டம் என 2 குளங்களில் ஆண்களும், பெண்களும் புனித நீராடிவிட்டு தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை வணங்கி வழிப்படுகின்றனர்.

 

இப்படி, யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது. வாழ்க சத்குருவின் தொண்டு, வளர்க அவரின் பணிகள்.” என மனதார வாழ்த்தி விடைப்பெற்றார்.

 

மேலும் ஈஷாவின் பணிகளுக்கு திருமுறைகள் சிறுபஞ்ச மூலம் போன்ற பற்பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி ஒப்பிட்டு ஆசி நல்கினார்.

 

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையையும் ஆதீனம் அவர்கள் இன்று ஆரத்தி காட்டி வழிப்பட்டு தொடங்கி வைத்தார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!