Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதானி ஒப்பந்தத்தை ரத்து செய்த மின்வாரியம்! பாமகவுக்கு கிடைத்த வெற்றி! - அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss

Prasanth Karthick

, செவ்வாய், 31 டிசம்பர் 2024 (12:45 IST)

அதானி பவர் நிறுவனத்துடன் மெற்கொள்ளவிருந்த மின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ள நிலையில், அதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

 

 

சமீபத்தில் அதானி நிறுவனம் மீது பல்வேறு உலகளாவிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையில், சூரிய ஒளி மின்சார ஒப்பந்தம் பெற அதானி நிறுவனம் கோடிக்கணக்கில் லஞ்சம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அதானிக்கு வழங்கப்பட இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

 

இதை வரவேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்படவிருந்த நிலையில்,  அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும்,  ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம்  அறிவித்திருப்பது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வசூலிக்கப்படும் மின் கட்டணத்தின் பெரும் பகுதி அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்படவிருந்தது தடுக்கப்பட்டிருப்பதும், அதற்காக பங்காற்றியதும்  மகிழ்ச்சியளிக்கிறது.

 

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்குவதற்கான நடைமுறையில்  தொடக்கத்திலிருந்தே ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்து வந்தன.ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த  2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரப்பட்டன. அதன்பின்னர்  கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஸ்மார்ட் மீட்டர்களின் விலைகள் எவ்வளவு குறைந்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது எந்த வகையில் நியாயம்? இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை யார் ஏற்பார்கள்? என்று கடந்த 6-ஆம் தேதி வினா எழுப்பியிருந்தேன்.

 

அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒரு மீட்டருக்கான மொத்த செலவு ரூ.6169 எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களின் விலை ரூ.4,000 என்ற அளவுக்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில், தமிழக அரசால் வழங்கப்படும் முன்பணம் தவிர, அதானி குழுமத்திற்கு அதிகபட்சமாக ரூ.15,000 வீதம் 80 லட்சம் மீட்டர்களுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் எத்தனை ஆயிரம் கோடி தாரை வார்க்கப்படுகிறது என்பதை எளிதாக கணக்கிட்டுக் கொள்ள முடியும் என்று  வினா எழுப்பிய நான், அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

 

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக  மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது.  அவ்வாறு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டால், மக்களின் பணம் அதானி குழுமத்திற்கு பதிலாக இன்னொரு நிறுவனத்திற்கு  தாரை வார்க்கப்படுவதற்குத் தான் வழிவகுக்கும்.  எனவே, அந்த முடிவை கைவிட்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

 

அதேபோல், அதானி குழும நிறுவனம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்காக வழங்கப்படும் கட்டணமான யூனிட்டுக்கு  ரூ.2.61 என்பது மிகவும் அதிகம் என்பதாலும்,  இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாலும் அதற்கான ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பாஜக தனித்து போட்டியா? கலக்கத்தில் அதிமுக..!