மும்பையில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் மாரடைப்பு வந்தபோதும் பேருந்தை கவனமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றி விட்டு இறந்து போனதுதான் அம்மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை தின்தோஷியிலிருந்து நவிமும்பை நோக்கி செல்லும் 523ம் நம்பர் பேருந்தின் ஓட்டுனர் ராஜாராம் கிஷன். நேற்று முன்தினம் வழக்கம்போல பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த ராஜாராமுக்கு காஞ்சூர்மார்க் பகுதியில் பேருந்து செல்லும்போது திடீரேன மாரடைப்பு ஏற்பட்டது. சுயநினைவை இழக்காமல் ராஜாராம் பஸ்ஸை உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தியதுடன் ஸ்டேரிங் மீது மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ஹார்ட் அட்டாக்கால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி பயணிகளில் ஒருவர் “அவர் உடனடியாக ப்ரேக் போட்டு பஸ்ஸை நிறுத்தாவிட்டால் எங்காவது மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அவர் சாகும் தருவாயிலும் எங்களை காப்பாற்றிவிட்டார்” என சோகமாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.