Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரிய வழக்கு.! சிறைத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Savaku Shankar

Senthil Velan

, வியாழன், 9 மே 2024 (11:37 IST)
சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக்கோரிய மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக சிறைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கை உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், உரிய சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கரின் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கோவை சிறையில் அடைக்கப்படும் முன், சவுக்கு சங்கர் காயமடையவில்லை என தெரிவித்தார். அதன்பின் சிறையில் அவரை சந்தித்தபோது காயமடைந்துள்ளதாகவும், அதற்கு முன் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எந்த காயமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளதாகவும் வழக்கறிஞர் வாதிட்டார்.
 
இதை மறுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, கோவை அழைத்து வந்த போது, தாராபுரம் அருகே விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.  சவுக்கு சங்கரின் இடது கை, வலது கால்பாதம், உதடு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும்,  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், சிறை மருத்துவரும் சவுக்கு சங்கரை பரிசோதித்து சான்று அளித்துள்ளதாகவும், அதுசம்பந்தமான அறிக்கையில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டு, கைரேகை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், சிறைத்துறையினர் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டி கோவை ஜூடீஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சட்டப் பணிகள் ஆணைக் குழு நியமித்த மூன்று வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு எலும்பு சிகிச்சை நிபுணர் அடங்கிய குழு, ஒரு மணி நேரத்துக்கும் மேல் சங்கரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இதையடுத்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை பெற்று நாளை (09.05.2024) தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரின் உடலில் உள்ள காயங்கள் தொடர்பான அறிக்கையை சட்டப் பணிகள் ஆணைக் குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
 
உரிய சிகிச்சை வழங்க மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து  செல்லப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அவரது தாயார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக்கோரிய மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக சிறைத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வாரமே சரியில்லை.. மீண்டும் 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..!