Publish Date: Mon, 28 Aug 2017 (12:50 IST)
Updated Date: Mon, 28 Aug 2017 (12:54 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில், சசிகலாவிற்கு எதிராக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. அதாவது, தினகரன், சசிகலா கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு, சசிகலா நியமித்த நியமனங்கள் செல்லாது. அதேபோல், அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது. மேலும், நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை தினகரன் தரப்பிடம் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.
இதில், சசிகலாவிற்கு எதிராக கடுமையாகவோ அல்லது அழுத்தமான ஒரு நிலைப்பாடோ தீர்மானத்தின் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியே தேர்தல் ஆணையத்தின் கையில் சிக்கியிருக்கும் வேளையில், அவரால் நியமிக்கப்பட்ட எந்த நியமனங்களும் செல்லாது. முக்கியமாக, துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், சசிகலா நீக்குவது தொடர்பாக எந்த வரியோ, வார்த்தையோ கூட தீர்மானத்தில் இடம்பெறவில்லை. இதன் மூலம், சசிகலாவை நீக்க எடப்பாடி அணியினர் தயங்குகிறார்கள் என்பதும், தற்போது அவர்கள் தினகரனை மட்டுமே குறி வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.