சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க தயங்க மாட்டோம் எனவும் தங்க தமிழ் செல்வன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களில் முக்கியமானவர் தங்க தமிழ்செல்வன். இவர்தான் மற்ற எம்.எல்.ஏக்களை வழிநடத்தி வருகிறார். தற்போது இவரது கண்காணிப்பேலேயே கர்நாடக மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் அவரோடு சேர்த்து மற்ற எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆளுநரிடம் கடிதம் கொடுத்த விவகாரம் தொடர்பாக, விளக்கம் அளிக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் சபாநாயகர் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதற்கான கெடு இன்றோடு முடிவடைகிறது. அதன்படி இன்று அவர்கள் அனைவரும் தலைமை அலுவலகம் சென்று சபாநாயகரை நேரில் சந்திக்க வேண்டும். ஆனால், தற்போது அவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அங்கிருந்தவாறே நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் “சபாநாயகரை சந்திக்கம் திட்டம் எதுவும் இல்லை. எடபபாடி தலைமையிலான ஆட்சியை கலைப்போம் என தினகரன் கூறியுள்ளார். நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம். ஏனெனில், எங்களுக்கு ஆட்சியை விட கட்சியே முக்கியம். ஆளுநரின் மீதிருந்த நம்பிக்கை எங்களுக்கு போய்விட்டது. அதனால், நாங்கள் அனைவரும் தினகரன் தலைமையில் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம்” என அவர் கூறினார்.