மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் பாஜக கூட்டுசேர்ந்து நாடகமாடுகிறார்கள் என அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவிடாமல் எப்பொழுதும் அலைக்கழிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு மழை அதிகளவில் பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அணை கட்ட திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் பங்குபெற முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்நிலையில் அதிமுக எம்.பி.க்கள் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அதிமுக எம்.பி.க்கள் பலரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்தார்.
இதுகுறித்து பேசிய அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை மேகதாது விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் கூட்டு சேர்ந்து கேம் ஆடுகிறார்கள். தமிழகத்தின் உரிமையை பறிக்க பார்க்கிறார்கள். மேகதாது விவகாரத்தை பற்றி விவாதிக்கக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் ரஃபேல் விவகாரத்தை எழுப்புகிறது. இதற்கு பதிலளிப்பது போல பாஜக நாடகமாடுகிறது. எது எப்படியாயினும் மேகதாதுவில் கர்நாடகாவை அணை கட்ட விடமாட்டோம் என தம்பிதுரை உறுதிபட கூறினார்.