தற்போதைய அ.தி.மு.க அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினால் தான் நடக்கின்றது என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கரூர் அருகே அருகம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் தொகுதி மக்களவை துணை சபாநாயகரும், கரூர் எம்.பி யுமான தம்பித்துரை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போதைய அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால்தான் இயங்குகின்றது. தற்போதைய முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் அவரது திட்டத்தினால் தான் செயலாற்றுகின்றார். மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவரோடு, பொறுப்பு வகித்து கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த கழக ஆட்சி சிறப்பாக செயல்படுவது மிகவும் சிக்கல்தான், எப்படி ஒரு கட்டிடத்தை கட்டுவது போல தான் ஆட்சியும், அரசும், அரசியலும் என்று ஒரே அரசியலாக பேசினார். தற்போதைய அரசு மறைந்த ஜெயலலிதாவினால் தான் என்பதை ஒத்துக்கொண்ட தம்பித்துரை அரசு நிகழ்ச்சியில் அரசியலை புகுத்தியதுதான் ஏன் என்று தெரியவில்லை என அரசு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்