அதிமுகவை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. அதனை உறுதிசெய்யும் வகையில் சமீபத்திய நிகழ்வுகள் உள்ளன.
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பாஜக படுதோல்வியடைந்தது. அந்த கட்சியால் டெப்பாசிட்டை கூட தக்கவைக்க முடியவில்லை. குறிப்பாக நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று நகைப்புக்கு உள்ளானது அதன் நிலைமை.
இதனை அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கிண்டலடித்துள்ளார். கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மறைமுகமாக பாஜகவை விமர்சித்து பேசினார்.
திராவிடத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து அனைவரும் சமமாக வாழ திராவிட இயக்கம்தான் காரணம். தேசியக் கட்சிகள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளீர்கள். தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியாத நிலையில்தான் தேசியக் கட்சிகள் உள்ளன. நோட்டாவைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்றதுதான் தேசியக் கட்சிகளின் சாதனை என்றார் தம்பிதுரை.