12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு முழு படிப்பு செலவையும் ஏற்று ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புடன் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் படிப்பு மற்றும் திறமையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு இலவச பயிற்சி மற்றும் கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு இலவசமாக வழங்கி வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தருவதற்கான புதிய அறிவிப்பை தாட்கோ வெளியிட்டுள்ளது.
இதில் தேர்வாகும் மாணவர்கள் இந்தியாவில் முன்னணி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனமான தரமணியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைட் நியூட்ரிசன் கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான தகுதியாக மாணவர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10 மற்றும் 12ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மூன்று வருட பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் NCHM JEE நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவு தேர்விற்கு 27.04.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான மொத்த செலவையும் தாட்கோ ஏற்பதுடன் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தரும். மேலதிக விவரங்களுக்கு தாட்கோவின் இணையதளமான http://www.tahdco.com/ ல் சென்று பார்க்கவும்.