தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில், இன்று முதல் இரண்டு அல்லது மூன்று டிகிரி வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலையில் சிறியளவு பனிமூட்டம் இருந்தாலும், பிற்பகல்களில் நல்ல வெயில் அடித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் உஷ்ணமான வானிலை நிலவும் எனக் கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்பட்டாலும், பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுவாக மார்ச் மாதத்தில் தான் வெயில் அதிகரிக்க தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்திலேயே படிப்படியாக வெப்பநிலை உயர்ந்து வருவதால், கோடை காலம் முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.