சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் நிலையில், இன்னும் சில நாட்களுக்கு இந்த பனிமூட்டம் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் மார்கழி மாதம் கழிந்த பின்னரும் அதிகரித்து வருவதை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் நேற்று பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாக கிளம்பியதை பார்க்க முடிந்தது.
இன்று காலை 8 மணி வரை சென்னையின் பல பகுதிகளில் பனிமூட்டம் இருந்ததாகவும், சென்னை மட்டுமின்றி வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான இடங்களில் பனிமூட்டம் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருந்ததாகவும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் இதுபோல் பனிமூட்டம் இடைவிடாது காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் குளிர் அதிகமாக இருக்கும் என்றும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சில நாட்களில் படிப்படியாக பனிமூட்டம் விலகிவிடும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்பட்டாலும், சென்னை உள்பட பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், நல்ல வெயில் அடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.