சென்னை பல்லாவரம் அருகே, பைக் ஓட்டும்போது ரீல்ஸ் எடுத்த 17 வயது சிறுவன், விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் 'ரீல்ஸ்' எனப்படும் குறுகிய காணொலிகளுக்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதும், அதனால் தங்களின் விலைமதிப்பில்லா உயிர்களை இழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், அதிவேகமாக கேடிஎம் பைக்கில் சென்றபோது விபத்தில்
சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
பல்லாவரத்தில் அதிவேகமாக சென்ற அந்தச் சிறுவனின் பைக், மற்றொரு பைக் மீது மோதியுள்ளது. இந்த மோதலில், சிறுவன் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.